பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டம்

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். உத்தராகண்ட் 
மாநில பாஜக எம்.பி. தருண் விஜய் இது தொடர்பாக மாநிலங்களவையில் கோரிக்கை வைத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என தருண் விஜய் மாநிலங் களையில் கோரிக்கை வைத்தார். இதற்கு அனைவருமே ஒருமனதாக ஆதரவளித்தனர். எனவே, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவர் பற்றிய நூல்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழி களில் விநியோகிக்கப்படும். அவரை பற்றிய கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகளும் பள்ளிகளில் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். முன்னதாக, தருண் விஜய் தலைமையில் டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணன், உபதலைவர் கே.வி.கே.பெருமாள், தமிழ் பண்பாட்டுக் கழகச் செயலாளர் எம்.நடேசன் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் 60 பேர் ஸ்மிருதி இரானியை அவரதுஅலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவர்களுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சென்றிருந்தார். இதுகுறித்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது, “திருவள்ளுவர் போல், சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளையும் நாடு முழுவதும் கொண்டாடி, அவருடைய எழுத்துக் களையும் நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். இதை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் நம் நாட்டின் தேச ஒற்றுமை கல்வித் துறையில் மீண்டும் நிலைநாட்டப் பட்டுள்ளது. இதற்காக, பிரதமர், அமைச்சர் மற்றும் தருண் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையும் அறிவிக் கப்படுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் வெள்ளிக்கிழமை தருண் விஜய் பேசும்போது, “திருவள் ளுவரின் பிறந்த நாள் மற்றும் அவரைப் பற்றிய விவரங்களை வடமாநிலமக்கள் அறியும்படி, அவரது பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாடுவதுடன், பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்து குறிப்பிடத்தக்கது.

Date: 
ஞாயிறு, நவம்பர் 30, 2014 - 6:30am
Source: 
http://alleducationnewsonline.blogspot.in/2014/11/blog-post_30.html
18782 registered users
7333 resources