தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தமிழ் சேவையை போற்றும் வகையில் ‘தமிழ்த் தாய் 67’ விழா, சென்னை தரமணியில் நடந்து வருகிறது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்களின் 2 லட்சம் பக்கங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி http://www.ulakaththamizh.org/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணைய சேவையை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரிய தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த நூல்களின் பக்கங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் இலவசமாக திறந்து படிக்கலாம். இந்த மின் நூல்களை பூச்சிகளாலும், தீயாலும் அழிக்க முடியாது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுப்பாளையம் கிராமத்தில் சமரச சன்மார்க நூலகத்தில் தமிழ்க் காப்பு ஆர்வலர்களால் கடந்த 100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த அரிய தமிழ் நூல்களான சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி பதவுரை, ஜெயமுனி சூத்திரம், அமிர்தம் பிள்ளையின் யாப்பிலக்கண விளக்கம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட 19-ம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை கண்டுபிடித்திருக்கிறோம். அவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றி, இணையத்தில் பதிவேற்றியிருக்கிறோம். இப்பணிக்காக அரசு ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மேலும் பல அரிய நூல்களை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் வீரமணி பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.ராசாராம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ. ராசாராம் பேசியதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நூற்றாண்டு கால அரிய நூல்களைத் தேடி கண்டுபிடித்து, அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி, இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது தமிழ் வளர்ச்சியில் ஒரு மைல்கல். வருங்கால மற்றும் நிகழ்கால ஆய்வறிஞர்கள் ஊரெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நிகழ்த்துவதைவிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களை பார்த்தால், படித்தால் மட்டுமே போதும். பழங்கால தமிழிலக்கிய செல்வங்களை இணையதளத்தின் வழியாக உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து சேர்த்த பெருமை தமிழக அரசை சேரும். இவ்வாறு ராசாராம் பேசினார்.

 

Date: 
வெள்ளி, மார்ச் 27, 2015 - 1:00pm
Source: 
http://alleducationnewsonline.blogspot.in
19294 registered users
7708 resources