பாதரச அச்சுறுத்தல்

 

பாதரசம் உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று. அழகுப் பொருள் முதல் மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் வரை பாதரசம் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், பாதரசம் என்பது அதிக நச்சுள்ள உலோகங்களில் ஒன்று. பாதரசத்தை சுவாசிப்பது அல்லது  உண்ணுவது கடும் விஷ விளைவை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாகவே, பாதரசம் அதிகமான கவனத்துடன் கையாளப்படுவதுடன்,  இதன் பயன்பாடும் உலகில் உள்ள பல  நாடுகளில் ஒழுங்குக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது 
 
அறிமுகம்

க்விக் சில்வர் (Quick Silver) என்று அழைக்கப்படும் பாதரசம் மட்டுமே திரவமாக இருக்கும் ஒரே உலோகமாகும். இந்த உலோகம் தொப்பிகளைத் தயாரித்தல் மற்றும் உணவை பதப்படுத்தல் உட்பட அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. எனினும், பாதரசத்தின் நச்சுத்தன்மை வெளிச்சத்திற்கு வந்தபின், இதன் பயன்பாடு உலகில் உள்ள பல நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  உலகில் உள்ள பாதரசத்தின் மிகப் பெரிய பயனாளியான இந்தியா இதனைத் தொடர்ந்து பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. பாதரசத்தின் வெளிப்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் பல என்றாலும். பாதரசத்தின் பயன்பாட்டைக்  கட்டுப்படுத்தினால் இது நாட்டிற்கு நன்மை பயக்கும்.

பாதரச அச்சுறுத்தல்

'மினாமடா' - 'Minamata' - என்ற பெயரைக் கேட்டலே பாதரசத்தால் ஏற்படும் மிகக் கடுமையான நரம்பு நோய் தான் நம் மனத்தில் எழும். இந்த நோய் முதலில் நரம்பு குறைபாடு காரணமாக மினாமடா விரிகுடாவை -  Minamata Bay - சுற்றியுள்ள மக்கள் மரணமடையத் துவங்கிய 1950 - களில் வெளிச்சத்திற்கு வந்தது. பல குழந்தைகளும் இறந்து பிறந்தன. விரிகுடாவிற்கு அருகில் உள்ள அசற்றலிடிகைட்டு மற்றும் வினைல் - acetaldehyde and vinyl - ஆகிய அமிலப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அதன் உற்பத்திக்கு   பாதரசத்தைப் பயன்படுத்தி வந்தது. அந்தப் பாதரசம் டிமீத்தைல் பாதரசமாக - Dimethyl mercury - மாற்றப்பட்டு உணவுச் சங்கிலிக்குள் நுழைந்தது. டிமீத்தைல் பாதரசத்தால் பாதிக்கப்பட்ட மீனை உட்கொள்வதின் மூலம் அந்த நோய் மக்களை அடைந்தது. இந்த நோய் மினாமடா விரிகுடாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால், இது மினாமடா நோய் - Minamata disease - என்று அறியப்படுகிறது.  

பாதரசம், இன்றும்கூட, பல தொழிற்சாலை உற்பத்தி முறைகளில் பயன்படுத்தப் படுகிறது. இந்த தொழிற்சாலை இயந்திரங்களிகளிலிருந்து  வெளிவரும் கழிவுகள், காற்று மற்றும் தண்ணீரில் கலந்துவிடுகின்றன.  உலகிலேயே இந்தியா தான் பாதரசத்தின் மிகப் பெரிய பயனாளியாக உள்ளது (ஆண்டிற்கு 207-531 டன்கள்).

குளோரின் வாயு-ஆல்கலி காரக் கரைசல் ஆகியவைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்  இந்தியாவில் உள்ள வளிமண்டலம் மற்றும் மேற்பரப்பு நீர் ஆகியவைகளில் பாதரசம் வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின் நிலையங்கள், எஃகு தொழிற்சாலைகள், மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள் ஆகியவைகளும் மற்ற மாசுமடுத்தும் பங்களிப்பாளர்கள் ஆவர். மேலும், பிளாஸ்டிக், கூழ் மற்றும் காகித தொழிற்சாலைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின் சாதனங்கள் ஆகியவைகளும் பாதரசத்தை பயன்படுத்துகின்றன.

இந்திய நிலக்கரியில் பாதரசத்தின் அளவு ஒரு மில்லியனுக்கு 0.01 பகுதிகள் (ppm ) மற்றும் 1.1 ppmக்கு இடையில் உள்ளது. உதாரணத்திற்கு ஒரு மின் உற்பத்தி நிலையம் தனது பாதரசத்தில் 90 சதவிகிதத்தை காற்றிலும், 10 சதவிகிதத்தை நிலத்திலும் வெளியேற்றுகிறது. பாதரசம் குறைவான வெப்பநிலைகளில் கொதிக்கும் என்பதால் வெளியேற்றும் விகிதம் அதிகமாக உள்ளது. இந்திய நிலக்கரியில் உள்ள சராசரி பாதரச அளவை 0.25 ppm என்று வைத்துக் கொண்டால், நிலக்கரி பயன்பாட்டினால் மட்டும் 1991-2001க்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட 65 டன் பாதரசம்  வெளியேற்றப் படுகிறது.

பாதரச மாசு இந்தியா முழுவதும் பரவியுள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுகளின் வெளியேற்றம் குஜராத் (வாட்வா, அங்லேஷ்வர், மற்றும் வாபி - Vatwa, Ankleshwar, and Vapi ) மற்றும் ஆந்திர பிரதேசத்தில் (பாடன்சேரு, மேடக் - Patancheru, Medak) நிலத்தடிநீர் மாசு படுதலுக்கு காரணமாக உள்ளது. மழைநீரும் வளிமண்டலத்தில் உள்ள பாதரச நீராவியை உறிஞ்சுகிறது.  குளோரின் - ஆல்கலி தொழிற்ச்சாலைகள், சாயங்கள், பெய்ண்டுகள் மற்றும்  வர்ணங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள நிலத்தடி நீர் மற்றும்  மேற்பரப்புநீர்  இரண்டிலும் பாதரசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப் பல இந்தியர்கள் இன்று பாதரச விஷப் பாதிப்பால் ஊனமுற்றவர்களாக மாறக்கூடிய அபாயத்தை சந்திக்கின்றனர்.

நம் நாட்டிலும் மினாமடா விளைவுகள் வருவது வெகுதூரத்தில் இல்லை!

 

 

ஆதாரம்:

 

ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பற்றி புது டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் -  - Centre for Science and Environment,  New Delhi on Health and Environment Related Issues - அளிக்கும் கட்டுரை - மே-ஜூன், 2005

விளக்கப் படங்கள் : சி.இ.இ. மற்றும் அர்கையம் 

 

18788 registered users
7333 resources