ஆசிரியர்களுக்கு வெகுமதி அளித்து ஊக்குவித்தல் - ஆக்கம் – எஸ். கிரிதர்

இந்தியக் கல்வியைப் பற்றி சமீப காலங்களில் வந்த அனைத்துச் செய்திகளும் நமது பள்ளிக் கல்வியின் செயல்பாடுகளில் உள்ள மோசமான குறைபாடுகளைப் பற்றித் தான் தெரிவிவிக்கின்றன. முதலில் “விப்ரோ – கல்வி கற்பிப்பதில் ஆர்வம்” பற்றிய ஆய்வு அறிக்கையை எடுத்துக் கொண்டால், 2006- ஆண்டு நிலையை விட 2011-ன் நிலை படு மோசமாகி இருப்பதைத் தான் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அரசாங்கப் பள்ளிகளின் நிலையோ இன்னும் மிகவும் கவலை அளிக்கும் படி இருக்கிறது. ஆனால், மிகவும் பணம் படைத்த தனியார் பள்ளிகளும் எந்த விதத்திலும் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அந்தப் பள்ளிப் பிள்ளைகளும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கேள்விகளில் மட்டுமே நன்றாகப் பதில் சொன்னாலும், கருத்தைப் புரிந்து அதைச் செயல் முறைப்படுத்தும் பயிற்சிகளைப் பற்றிய கேள்விகளில் சரியாகப் பதில் சொல்ல முடியாது விழிக்கும் நிலைமையும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏ.சி.இ.ஆர். (ACER –  AUSTRALIAN COUNCIL FOR EDUCATIONAL RESEARCH) – என்ற அமைப்பு உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிசா (PISA – PROGRAMME FOR INTERNATIONAL STUDENT ASSESSMENT) - தேர்வு முறையை ஹிமாசலப் பிரதேசம் – தமிழ் நாடு ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய போது, அந்த இரண்டு மாநிலங்களும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை  ஒப்பிடுகையில், மிகவும் அதள பாதாளத்தில் பின் தங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த இரண்டு மாநிலங்களையும் குறைகூறுவதற்கு முன், இந்த தேர்வு அறிக்கையின் முடிவுகளைப் பற்றித் தெரிந்திருந்த அந்த மாகாணத்தின் கல்வி அதிகாரிகள் குறைகளைக் கலையும் முயற்சியில் ஒவ்வொருவரையும் ஈடுபட முடுக்கி விட்ட அவர்களின் தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.        

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில், விளக்கங்களும், காரணங்களும் வலம் வந்து, பிறகு அந்தக் கூப்பாடுகள் கூடிய சீக்கிரமே அடங்கி விடுவதுடன், அறிக்கையின் பயங்கரமான கண்டுபிடிப்புகள் வெகு சுலபமாகப் மறக்கப்பட்டு விடும். மற்ற  மாநிலங்களும் இந்த அறிக்கையால் பயமடைந்தாலும், நாம் எப்பொழுதும் போல் நமது கனவு உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுவோம். இது தான் நடக்கும் என்பதற்கு என்னிடம் தகுந்த காரணங்கள் இருக்கின்றன.

நான் மற்றொரு உதாரணம் மூலம் விளக்க ஆசைப்படுகிறேன். 1996-ம் ஆண்டு, ப்ரோப் - என்ற பிரபலமான ஆய்வுமுறை மூலம் - (PROBE - Public Report On Basic Education) - ஜீன் டிரசியும் - Jean Dreze - அவரது குழுவினரும் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தார்கள். “இந்தியாவில் உள்ள அரசாங்கப் பள்ளிகளில், எந்த ஒரு தருணத்திலும், 25 சதவிகித ஆசிரியர்கள் பள்ளியிலும், வகுப்பிலும் காணப்படுவதில்லை என்பதை ஒருவர் காண்டுபிடிக்கலாம்” என்பது அந்த அறிக்கையில் பலவிதமான கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் தெரிவிக்கப்பட்ட வாசகமாகும்.

மீதம் உள்ள 75 சதவிகிதப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களிலும், சுமார் 48 சதவிகித ஆசிரியர்களே பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காணமுடிகிறது. இந்தக் கணக்குப் படிப் பார்த்தால்,40 சதவிகத்திற்கும் குறைந்த அளவு திறமையுடன் தான் அரசாங்கப் பள்ளிகள் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது. ஆனால், 1996 என்ற வருட அறிக்கை மிகவும் காலம் சென்ற ஒன்றாகும். ஆகையால், அதற்குப் பிறகு, நாம் திறமையுடன் செயல் பட்டிருப்போம் என்று நீங்கள் நினைப்பது இயல்பு தான். ஆனால், உண்மை நிலை என்ன என்பதை நாம் மீண்டும் நினைவு கூர்வோம்.

2008-ம் ஆண்டு, அதே குழுவினர் ப்ரோப் 2 - என்ற ஆய்வை மேற்கொண்டனர். 12 வருடத்திற்குப் பிறகும், 25 விழுக்காடு வரை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராமலும், பள்ளிக்கு வந்த ஆசிரியர்களில் சுமார் 48 விழுக்காடு ஆசிரியர்கள் மட்டுமே பாடங்களை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், சர்வ சிக்‌ஷா அபியான் - Sarva Shiksha Abhiyan - என்ற திட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் ஒரு பள்ளி நிறுவப்பட்டும், பள்ளிக்குக் குழந்தைகள் ஒழுங்காக வருவதற்காக 80 சதவிகித குழந்தைகளுக்கு மேல் மதிய உணவுத்திட்டம் அமுல் படுத்திச் செயல்பட்டாலும், பள்ளியில் கற்பிக்கும் நேர அளவு என்னவோ முன்போலவே எந்தவித முன்னேற்றமும் இன்றி அதே நிலையில் காணப்பட்டது. இந்த அவல நிலை கல்விசாரா மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமே அல்லாது கல்வித் திட்டத்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது நிச்சயமாக அதிர்ச்சிச் செய்தியாக இருக்காது. சமீப காலத்தில், டெஹ்ராடூனில் உள்ள அரசாங்கப் பள்ளி ஒன்றில், குழந்தைகளை வகுப்பறையில் எந்தவிதமான செயல் இன்றி ஓய்வாக இருக்கச் செய்து விட்டு, சுமார் ஒரு டஜன் ஆசிரியர்கள் கம்பளி நூல் பின்னல் வேலையிலும், சூரிய ஒளியில் குளிர்காய்ந்து கொண்டும் இருப்பதை நானே நேரில் பார்த்தேன்.  

மன உலைச்சலின் எதிர் விளைவுகள்

2004-ம் ஆண்டில், ஹார்வார்ட் பல்கலைக் கழகம் மூலமாக மைக்கேல் க்ரெமெர் - கார்த்திக் முரளிதரன் ஆகிய இருவரும்  ‘ஆசிரியர் பள்ளிக்கு வராமை’ என்பதைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவுகள் ப்ரோப் அறிக்கையின் கண்டுபிடிப்புகளை ஒப்புக்கொண்டதுடன் அவைகளை ஊர்ஜிதமும் செய்தன. ஆனால், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒரு கருத்து - அதை ஒரு மிக முக்கியமானதாகவே கருத வேண்டும் - போதிய கவனத்தைப் பெறவில்லை. ஆகையால், கருத்தை வெளியிட்ட அந்த முக்கிய அறிக்கையை வெளியே எடுத்து, அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது.

க்ரெமெரும், முரளிதரனும் ஆசிரியர்களிடம் ஏற்படும் அவர்களின் திருப்தி - அதிருப்தி ஆகியவைகளின் அளவுகளை அறிய விரும்பிய போது, பள்ளிக்கு ஒழுங்காக வந்து, மனச்சாட்சிக்கு உட்பட்டு கடமையாற்றும் ஆசிரியர்களைக் காட்டிலும், பள்ளிக்கு டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்கள் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருப்பதை அவர்கள் கண்டார்கள். இது அந்த ஆசிரியர்களிடம் மன உலைச்சலை ஏற்படுத்துவதாகாதா ?

நிச்சயமாக ஏற்படுத்தாது. ஏனென்றால், ‘இந்த ஏமாற்று ஆசிரியர்கள்’ நமது கல்வி முறையை மிகவும் நேசிப்பவர்கள். இந்த முறையில், அவர்களுக்கு நல்ல சம்பளம், அவர்களுக்கு விருப்பமான இடங்களில் வேலை, விண்ணப்பம் இல்லாமல் விடுப்பு எடுப்பதை யாரும் அவர்களைக் கேள்வி கேட்க முடியாத நிலை, சம்பளக் குழு அவ்வப்போது அறிவிக்கும் சம்பள உயர்வு அனைத்தும் அவர்களுக்கும் உண்டு என்ற நிலை ஆகியவைகள் அடங்கும். சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் தான் இதனால் மிகவும் மனம் புண்பட்டவர்களாவர். ஏனென்றால், அவர்களது மனச்சாட்சிப் படி திறமையாகச் செயல்பட்டது பாராட்டப்படவோ அல்லது பரிசளிப்போ அவர்களுக்குக் கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களது கடமை தவறும் சக ஆசிரியர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.  

நமது கல்வி நிர்வாகம் மேம்பட வேண்டு மென்றால், ஆசிரியர்-மாணாக்கர் விகிதத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கு ஆசிரியர்களை எல்லாப் பள்ளிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் போது அறிவுபூர்வமாக நாம் செயல்பட முயல வேன்டும். மேலும், சன்மானம் - பாராட்டு ஆகியவைகளுடன், வேலையில் பொறுப்புணர்ச்சியை ஊட்டும் விதிமுறைகளை ஏற்படுத்தினால், நாம் நமது பள்ளியின் தற்போதைய 40 விழுக்காட்டுச் சிறப்பினை அதற்கு மேலும் உயர்த்தி சிறப்பாகச் செயல்படச் செய்ய முடியும்.  சிறந்த ஆசிரியர்களுக்கு அன்பளித்து ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல், பொறுப்பற்ற ஆசிரியர்களை கடுமையாகத் தண்டிப்பதும் அவசியமாகும்.

தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை ஏமாற்றும் ஆசிரியர்கள் உணரவைக்க வேண்டும். அதே சமயத்தில் கல்வித் துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரியும் பல நல்ல ஆசிரியர்கள் அவ்வப்போது அங்கீகரிக்கப்படுவதால், இது மற்ற ஆசிரியர்களுக்கும் அவர்களைப் பின்பற்றிச் செயல்பட ஊக்க சக்தியாக இருக்கும். இந்த இரண்டு காரியங்களுக்கும் எந்தவிதமான செலவும் இல்லை. அவைகளுக்கு தேவையானது எல்லாம் தீவிரமான நிர்வாக முறை மட்டும் தான்.

தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் தரம் மிகவும் தாழ்வாக இருப்பதால் அவர்களால் கற்பிக்கப்படும் மாணவர்கள் மனப்பாடம் செய்வதால் மட்டுமே சிறப்பாக இருக்கிறார்கள் என்பதுடன், உட் கருத்துக்களை அறிவதில் மோசமாக இருக்கிறார்கள் என்ற நிலையைப் பற்றி அவர்கள் தீவிரமான ஆத்ம சோதனை செய்ய வேண்டியவளாகிறார்கள். அரசாங்கப் பள்ளிகளோ  ஆசிரியர்களை ஒழுங்காக பள்ளிக்கு வந்து, பணிபுரியும் நேரத்தில் கற்பிக்க வைக்க ஒரு ஆரம்ப முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். .

700 அரசாங்கப்பள்ளிகளுக்கும் மேலாக சமீப காலத்தில் நடத்திய ஆய்வு அறிக்கையின் விவரம் இது தான்: “ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் காலம் தவறாமல் பள்ளிக்கு வந்து கற்பித்தால், மாணவர் - ஆசிரியர் விகிதம் 30:1 என்ற அளவில் இருந்தால், பள்ளி அதன் வேலையைச் சிறந்த முறையில் செய்வதற்கு நாம் ஒரு நல்ல வாய்ப்பு அளித்ததாக இருக்கும்.”

ஒரு பயணத்தில் விரும்பி ஏற்றுக் கொண்ட ஆரம்பமாக இது எனக்கு இருக்கும். ஆனால் இந்தப் பயணம் முடிய பல வருடங்கள் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

 

எஸ். கிரிதர் அஸிம்பிரேம்ஜி பவுண்டேஷனால் உருவாக்கப்பட்ட அஸிம் பிரேம்ஜி யுனிவர்சிடியின் பதிவாளராகப் பணி புணிகிறார். இந்தக் கட்டுரை டெக்கான் ஹெரால்ட் என்ற ஆஙகில நாளிதழில் வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்தான் இந்தக் கட்டுரை.

 

 

 

18808 registered users
7333 resources